This Article is From Apr 18, 2020

கொரோனா வைரஸ்: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு முக்கிய ஆலோசனை!

Coronavirus: ராஜ்நாத் சிங் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஹைலைட்ஸ்

  • ராஜ்நாத் சிங் தலைமையில் முக்கிய ஆலோசனை!
  • ஐந்தாவது முறையாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடைபெறுகிறது.
  • இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கவில்லை.

கொரோனா நெருக்கடி காலக்கட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையேயான, ஒருங்கிணைப்புகள் குறித்தும் மே.3ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. 

இதில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிர்தி இரானி, தர்மேந்திர பிரதான், ராம்விலாஸ் பஸ்வான், கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எனினும், இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கவில்லை. .

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதற்கு பின்னர், ஐந்தாவது முறையாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடைபெறுகிறது. 

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. இந்த அமைச்சர்கள் குழுவில், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு மாநிலத்திற்கு பொறுப்பாளராக இருந்து வருகின்றனர். அவர்கள் மாநில அரசுகளின் நிலைப்பாடு குறித்து கேட்டறிந்து அதற்கு ஏற்ற அடிப்படையில் புதிய திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர். 

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பிரதமர் மோடியிடம் சமர்பிக்கப்படும். 

இதேபோல், நேற்றைய தினம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த ஆலோசனையில், கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் மற்றும் நாட்டில் சோதனை கருவிகள் மற்றும் பிபிஇ (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) கிடைப்பது குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டது. 

இந்தியாவில் 170 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள சிவப்பு ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிக வேகத்தில் நிகழும் மாவட்டங்கள் என்ற அடிப்படையில் 123 மாவட்டங்களும், கொத்துக்கொத்தாக கொரோனா வைரஸ் நோய் தாக்கிய பகுதிகள் என்ற அடிப்படையில் 47 மாவட்டங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் அவை இயல்பு நிலை மாவட்டங்களாக, அதாவது ஆரஞ்ச் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக மாற்றி வகைப்படுத்தப்படும். மேலும், 14 நாட்களுக்கு எந்த புதிய தொற்றும் ஏற்படவில்லை என்றால் அவை கொரோனா பாதிப்பு இல்லாத, பச்சை மாவட்டங்களாக மாற்றப்படும்.

பொருளாதார நிலை தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரதமர் மோடி சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்றைய அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து வருகிறது. தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் நீண்டகால முடக்கப்பட்டதன் காரணமாக லட்சக்கணக்கானவர்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, வங்கி மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

With input from PTI, ANI

.