இந்த விவகாரம் குறித்து சிபிடிடியின் தலைவர் விளக்கம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27,000ஐ நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9 என்கிற அளவில்தான் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
இந்த நிலையில் பொருளாதார மீட்டெடுப்புக்காகவும், தற்போதைய நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும் வரியை உயர்த்துவது என்கிற பரிந்துரையை இந்திய வருவாய் சேவையின் சில அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இதில், ஆண்டுக்குக் குறிப்பிட்ட அளவு வருமானம் கொண்ட கோடீசுவரர்களின் வரி கடந்த காலங்களில் 40 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தற்போதைய நிதி பற்றாக்குறையின் சூழ்நிலையில் அரசு இந்த வரி சதவிகிதத்தினை மீண்டும் 40 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் எனவும் வெளி நாட்டு நிறுவனங்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரைகள் ஒழுக்கமற்ற செயல் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், இத்தகைய அறிக்கை கோரப்படவில்லை என்றும், இதை தயாரிப்பது உள்நாட்டு வருவாய் சேவையின் (IRS) கடைமையல்ல என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு வருவாய் சேவையின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கடுமையாகச் சாடியுள்ளது.
மத்திய நேரடி வரி வாரிய(CBDT) தலைவர், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தயாரித்த அலுவலர்களிடமிருந்து விளக்கத்தினை கோரியுள்ளார்.
போர்ஸ் குழு அதாவது நிதி விருப்பங்கள் மற்றும் COVID-19 தொற்றுநோய்க்கான பதில் (Fiscal Options and Response to COVID-19 Epidemic- FORCE) என்கிற குழுவானது நிதி மேம்பாடு குறித்து 44 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. இதில் பெரும் செல்வந்தர்களிடமிருந்து பெறும் வரியை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
2019-20 ஆண்டில் அறிவிக்கப்பட்ட 24.6 லட்சம் கோடி வரியில் 21.6 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. தற்போதைய ஆண்டில், வரி வருவாயை 12 சதவிகிதம் உயர்த்தி 24.2 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இக்கடினமான சூழலில் மக்களுக்கும் வரி செலுத்துவோருக்கும் உதவ பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்து.
இச்சூழலில், இந்திய வருவாய் சேவையின் மேற்கண்ட பரிந்துரைகள், மத்திய நேரடி வரி வாரியத்தின் கருத்துகளையோ, அல்லது நிதியமைச்சகத்தின் கருத்துகளையோ பிரதிபலிக்கவில்லை என நிதியமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகவும், பணப்புழக்கத்தினை அதிகரிப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தினை எளிமையாக்குவதற்கும் நிதி அமைச்சகம் பல்வேறு வழிகளில் முயன்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.