ஒரே நாளில் நாட்டில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா தங்களுக்கும் பரவி விடும் என்று சிறைக் கைதிகள் அச்சம்
- விடுதலை செய்யக்கோரி சிறைக் காவலர்களுடன் அடிதடியில் ஈடுபட்டனர்
- சிறைக்கு மாநில அமைச்சர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்
Kolkata: கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதை அறிந்த மேற்கு வங்க மாநிலம் டம்டம் மத்தியச் சிறைக் கைதிகள், தங்களை விடுவிக்கக்கோரி சிறைக் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கைதிகளை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தின்போது சிறைக்காவலர்கள் மற்றும் கைதிகளின் தரப்பில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக டம்டம் மத்தியச் சிறை வளாகத்திற்குள் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், தங்களையும் அது பாதித்து விடும் என்றும், இதனால் தாங்கள் உயிரிழந்து விடுவோம் என்றும் சிறைக் கைதிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே நேற்று முதற்கொண்டு, கைதிகளை அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளனர். மார்ச் 31-ம்தேதி வரையில் இந்த தடை நீடிக்கும்.
அதேநேரத்தில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த கைதிகளுக்கு 15 நாட்கள் பரோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதுவும் சக கைதிகள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் தங்களுக்கு பரோல் வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சிறையின் சில பகுதியில் புகை கிளம்பியதைத் தொடர்ந்து 3 தீயணைப்பு எந்திரங்கள் சிறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு வங்க நிர்வாகத்தறை அமைச்சர் உஜ்வால் விஸ்வாஸ் மற்றும் மூத்த அதிகாரிகள் சிறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதித்துறை பணிகளில் மார்ச் 31-ம்தேதி வரையில் பங்கேற்க மாட்டோம் என்று மேற்கு வங்க வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 283 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் நாட்டில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.