This Article is From May 09, 2020

சடலங்களுக்கு மத்தியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு 16,800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 10,714 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. மாநிலத்தில் 400க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

வீடியோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Mumbai:

மகாராஷ்டிராவில் சடலங்களுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் மும்பை கார்ப்பரேஷனால் இயக்கப்படும் சியோன் மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில் சுமார் 7 சடலங்கள் படுக்கையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு அருகருகே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் குடும்ப உறுப்பினர்களுடன் அருகில் நிற்கின்றனர். இந்த காட்சிகள் காண்போருக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த வீடியோவை ட்விட்டரில், பாஜக எம்எல்ஏ நிதிஷ் ரானே பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், 'சியோன் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சடலங்களுக்கு அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மிகமிக மோசமான காரியம். என்ன மாதிரியான நிர்வாகம் அங்கு நடக்கிறது. இதை மிகப்பெரும் அவமானமாக பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார். 
 

வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சியோன் மருத்துவமனையின் டீன் பிரமோத் இங்கேல் கூறுகையில், 'கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு அவர்களது உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால்தான் சடலங்கள் அங்கேயே கிடந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டோம். இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம்' என்று கூறியுள்ளார்.

பிணவறைக்கு சடலங்கள் ஏன் கொண்டு செல்லப்படவில்லை என டீனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 'பிணவறையில் 15 பெட்டிகள் உள்ளன. அவற்றில் 11 நிரம்பி விட்டது. இந்த சடலங்களையும் அங்கே கொண்டு சென்றால் பிணவறை முழுமையாக நிரம்பி இன்னும் சிக்கலை ஏற்படுத்தி விடும்' என்றார். 

வீடியோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

சடலம் முழுமையாக கட்டப்பட்டுள்ளதால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு 16,800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 10,714 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. மாநிலத்தில் 400க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

.