எந்த தகுதியின் அடிப்படையில் பொது முடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- மே 7க்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என மத்திய அரசுக்கு சோனியா கேள்வி
- காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்
- கொரோனா பிரச்னையால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது
New Delhi: ஊரடங்கை மே 17-ம்தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், அதற்கு பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங்கில் நடந்த இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாநில முதல்வர்களிடம் தங்களது மாநில பிரச்னைகளை சோனியாவிடம் எடுத்துரைத்தனர். ஊரடங்கை மேலும் நீட்டித்தால் பொருளாதார பிரச்னை அதிகமாகும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.
முதல்வர்களுடனான இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, 'மே 17-ம்தேதிக்கு பின்னர் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?. நிலைமையை அரசு எப்படி கையாளும்?. எந்த தகுதியின் அடிப்படையில் ஊரடங்கு முடிவுக்கு கொண்டுவரப்படும் அல்லது நீட்டிக்கப்படும்?' என்பது உள்ளிட்ட கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதேகேள்வியை கேட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 'மே 17-ம்தேதிக்கு பின்னர் மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்' என்று கூறினார்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், 'டெல்லியில் இருந்துகொண்டு நோய் கட்டுப்பாடு பகுதிகளை மத்திய அரசு வகைப்படுத்தி வருகிறது. ஆனால் களத்தில் என்ன நடக்கிறது என்பது அரசுக்கு தெரியவில்லை' என்று விமர்சித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'அதிக நிவாரணத் தொகை வழங்காமல் எப்படி நிலைமையை சமாளிக்க முடியும்?. ஏற்கனவே மாநில அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வருவாயை இழந்து விட்டது' என்று தெரிவித்தார்.
மாநிலங்கள் மிக மோசமான நிலையை அடைந்தபோதிலும் மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
கடந்த திங்களன்று வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப, ரயில் டிக்கெட்டுகளுக்கான செலவை காங்கிரஸ் ஏற்கும் என அறிவிப்பு வெளியிட்டார். அவர்களிடம் மத்திய அரசு கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு அடுத்த சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் பயணத்திற்கு ஆகும் செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்றும், மீத தொகையை மாநில அரசு ஏற்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது.