This Article is From Apr 14, 2020

'யாரும் பசியோடு இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்' - பிரதமருக்கு சோனியா கடிதம்

அண்டை மாநில தொழிலாளர்கள்தான் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு கிடைக்காத அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு பலநூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றுள்ளனர். 

'யாரும் பசியோடு இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்' - பிரதமருக்கு சோனியா கடிதம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 324 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்
  • பசியால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய சோனியா வலியுறுத்தல்
  • 10 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்க கோரிக்கை
New Delhi:

கொரோனா வைஸை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நடவடிக்கையால், யாரும் பசியால் வாடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-

இந்த கடிதம் உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் சந்திக்கும் என்று நம்புகிறேன். இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஊரடங்கால் உணவுப் பாதுகாப்பற்ற நிலையை சந்திக்கின்றனர். இந்தியாவில் ஏராளமான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாக அளிப்பதாக கூறியுள்ளீர்கள். இதனை நான் வரவேற்கிறேன். ஜூன் மாதம் வரையில் இதனை நீங்கள் இலவசமாக அளிக்கிறீர்கள்.

இந்த திட்டத்தில் வழங்கப்படும் உணவு தானியங்களை 10 கிலோவாக உயர்த்தி, மேலும் 3 மாதங்களுக்கு அதாவது செப்டம்பர் வரையில் நீங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொரோனாவுக்கு எதிரான போரில், இந்திய மக்கள் யாரும் பசியோடு இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக நாட்டில் 70 சதவீத வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் இந்தியாவுக்கு இந்த முடக்கம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாநில தொழிலாளர்கள்தான் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு கிடைக்காத அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு பலநூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றுள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 324 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்திருக்கிறது. 

.