டெல்லி - நொய்டா சாலையை கடக்க சிறப்பு பாஸ்கள்; சோதனைகள் அவசியம்!
ஹைலைட்ஸ்
- டெல்லி - நொய்டா சாலையை கடக்க சிறப்பு பாஸ்கள்
- நாட்டிலையே அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மூன்றாவது இடத்தில் டெல்லி
- டெல்லி-நொய்டா இடையே பயணிப்பவர்களுக்கு தொற்று பரவல்
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் டெல்லி மற்றும் நொய்டா எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த உத்தரவு வரும் வரை சாலைகள் சீல் வைக்கப்பட்டிருக்கும் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, அத்தியாவசிய போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு பாஸ்கள் வைத்திருப்பவர்கள் மட்டும், சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 2,100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
டெல்லி மற்றும் நொய்டா இடையே பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், கடந்த சில நாட்களாக நொய்டாவில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பலர் டெல்லி சென்று வந்தவர்களாக உள்ளதாக மாவட்ட நீதிபதி சுஹாஸ் எல்.ஒய் தெரிவித்தார். மேலும், மாவட்ட சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நேற்றைய தினம், நொய்டாவில் மூன்று பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், அவர்கள் டெல்லியுடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.
இதைத்தொடர்ந்து, டெல்லி-நொய்டா இடையே பயணிப்பவர்களுக்கு தொற்று பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர், எனவே எல்லைக்கு உடனடியாக சீல் வைத்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
பொது மக்களின் நலனுக்காக எல்லை முழுவதுமாக மூடப்படுவதாகவும் அவர் ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதில், மருத்துவர்கள், அதிகாரிகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயைக் கையாள்வதில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகள் அல்லது பிறருக்கு பாஸ் கிடைக்கும். அத்தியாவசிய பொருட்கள், ஆம்புலன்ஸ்கள், பாஸ் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பாஸ் கொண்ட ஊடக நபர்களும் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று டெல்லி மற்றும் காஜியாபாத் இடையே நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.