This Article is From Mar 24, 2020

'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்படுகிறது' - மத்திய அமைச்சர்!

இதுவரையில் நாடு முழுவதும் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1-ம்தேதி வரை போடப்பட்டுள்ளது.

'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்படுகிறது' - மத்திய அமைச்சர்!

15 லட்சத்திற்கும் அதிகமானோர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்களே இங்கு கொரோனா பரவ முக்கிய காரணம்
  • வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் அவர்களது குடும்பத்தினர் கடும் பாதிப்பு
  • போர்க்கால அடிப்படையில் இந்தியாவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
New Delhi:

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களால் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி கூறியுள்ளார். மத்திய அரசு பிறப்பித்துள்ள வேண்டுகோளை மக்கள் ஏற்று நடக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

உயிர்களைப் பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை மக்கள் முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா போன்றவற்றால்கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களில் இல்லாத தொழில்நுட்ப வசதிகளே கிடையாது.

நாட்டில் 15.24 லட்சம் பேர் விமான நிலையத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69,436 பேர் வீட்டில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். 

இதுவரையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால்தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள், குடும்பத்தினருக்கும் வைரஸை பரப்பி விட்டனர். எனவே நாம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த பிரச்சினையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வீட்டை விட்டு முடிந்தவரை யாரும் வெளியே வர வேண்டாம்.

உலகப்போர் என்பது உலக நாடுகளுக்கு இடையே நடைபெற்றது. ஆனால் கொரோனாவுக்கு எதிரான போர் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நடந்து வருகிறது. கொரோனா யுத்தம் உலகப்போரைக் காட்டிலும் பெரியது.

இவ்வாறு அவர் கூறினார். இதுவரையில் நாடு முழுவதும் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1-ம்தேதி வரை போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்திலிருந்து 41 ஆயிரமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உயர்ந்துள்ளனர். 

.