கடந்த 2-ம்தேதி நாட்டில் 211 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது.
New Delhi: இந்தியாவில் 430 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பதாகவும், மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 45 சதவீதம் பேர் 6 நகரங்களில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தள்ளது.
முன்னதாக கடந்த 2-ம்தேதி நாட்டில் 211 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்திருக்கிறது.
அதிகபட்சமாக மும்பை நகரத்தில் மட்டும் 3,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் டெல்லி 2,081, அகமதாபாத் 1,298, இந்தூர் 915, புனே 660, ஜெய்ப்பூர் 537 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
மொத்த பாதிப்பில் 45 சதவீதம்பேர் 6 நகரங்களில் வசிக்கின்றனர்..
இந்தியாவில் கடந்த மார்ச் 25-ம்தேதி தொடங்கிய ஊரடங்கு உத்தரவு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவுதலின் வேகம் குறைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்பு 3.4 நாட்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்து விடும். ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்வதற்கு 7.5 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் கொரோனா பரவல் மிக குறைந்த வேகத்தில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
தற்போது வரையில் 19,984 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 640 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு மிக்குறைந்த பாதிப்பே ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 720-ல் 430 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பங்கு 60 சதவீதமாக இருக்கிறது.
அதிக பாதிப்பு காணப்படும் டெல்லி, மும்பையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இங்கு சிவப்பு மண்டல பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
திங்களன்று கிராமப்புறங்களில் உள்ள சில தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை தீவிரம் அடைந்திருந்ததால், மே 3-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார்.
உலகிலேயே மிகப்பெரும் முடக்க நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மே 3-க்குள் நிலைமை கட்டுக்குள் வந்து விடும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே தெலங்கானா மாநிலத்தில் மே 7-ம்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது.