This Article is From Apr 24, 2020

கொரோனா வைரஸ் சூரிய வெளிச்சத்தால் சீக்கிரம் அழிகிறது: அமெரிக்க விஞ்ஞானிகள் முக்கியத் தகவல்!

இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளும், அது மிகவும் குளிரான சூழலில் வேகமாக வளர்ந்ததையும்...

கொரோனா வைரஸ் சூரிய வெளிச்சத்தால் சீக்கிரம் அழிகிறது: அமெரிக்க விஞ்ஞானிகள் முக்கியத் தகவல்!

இன்னும் இந்த ஆய்வு குறித்து வெளியிலிருந்து யாரும் ஆராயாத நிலையில், இது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்களை பொதுத் தளத்தில் இருப்பவர்களால் சொல்ல முடியவில்லை.

ஹைலைட்ஸ்

  • ஆய்வு இன்னும் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை
  • ஆய்வு குறித்து வெளியாட்கள் ஆராயவில்லை
  • கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்
Washington:

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சமீபத்தில் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் சூரிய வெளிச்சத்தால் கொரோனா வைரஸ் சீக்கிரமாக அழிகிறது என்று கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு இன்னும் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. மேலும், அது குறித்து வெளியில் இருந்து யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க ஹோம்லேண்டு பாதுகாப்புத் துறை செயலாளரின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகரான வில்லியம் பிரியன், வெள்ளை மாளிகையில் இது குறித்த தகவலை வெளியிட்டார். அவர், சூரிய ஒளியால் வெளிப்படும் அல்ட்ரா வயலெட் கதிர்கள், கொரோனா வைரஸை அழிப்பதில் பங்கு வகிப்பதாகவும், இதனால் வெயில் காலத்தில் வைரஸ் தொற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். 

“ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா வைரஸை சூரிய வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல ஒரு இடத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது ஈரப்பதம் குறைந்தாலோ அது வைரஸுக்கு சாதகமான சூழலாக இருக்கவில்லை,” என்று விளக்குகிறார் வில்லியம். 

இன்னும் இந்த ஆய்வு குறித்து வெளியிலிருந்து யாரும் ஆராயாத நிலையில், இது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்களை பொதுத் தளத்தில் இருப்பவர்களால் சொல்ல முடியவில்லை.

மேலும், ஆய்வில் சரியாக எந்த அளவிலான கதிர்கள் பயன்படுத்தப்பட்டது என்றும், அதே வகையில் சூரிய வெளிச்சத்தில் இயற்கையாக வெளிப்படும் கதிர்கள் செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் வில்லியம், “வெயில் காலம் வரவுள்ளதால் அது வைரஸை முற்றிலும் அழித்துவிடும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. இந்த ஆய்வு முடிவில் கூட, வைரஸ் சூரிய வெளிச்சத்தினால் மட்டும் முற்றிலும் அழிந்துவிடும் என்று சொல்லப்படவில்லை. எனவே, தொடர்ந்து சமூக விலகலையும் கட்டுப்பாடுகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்,” என்றும் எச்சரித்துள்ளார். 

இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளும், அது மிகவும் குளிரான சூழலில் வேகமாக வளர்ந்ததையும், மிகவும் வெப்பமான சூழலில் அந்தளவுக்கு வளர முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டின. 

இதற்கு எடுத்துக்காட்டாக, மிகவும் வெப்பமான தட்பவெப்ப சூழலைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் 7,000 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் 77 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர்.

அமெரிக்க சுகாதாரத் துறை வட்டாரமும், வெயில் காலம் வர வர, கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் குளிர் காலம் வரும்போது, மீண்டும் வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

.