This Article is From Mar 25, 2020

புதிதாக 5 பேருக்கு கொரோனா!! தமிழகத்தில் பாதிப்பு 23-ஆக உயர்ந்தது!

தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதற்கொண்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக தமிழகத்தில் அதிகரித்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

புதிதாக 5 பேருக்கு கொரோனா!! தமிழகத்தில் பாதிப்பு 23-ஆக உயர்ந்தது!

இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்தம் 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
  • அரசுக்கு ஒத்துழைக்காவிட்டால் பேரிழப்பு நேரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 23-ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், 'புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றும் அவர்களது சென்னையைச் சேர்ந்த பயண வழிகாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அனைவரும் சேலம் மருத்துவமனையில் 22-ம்தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 2,09,276 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில், 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் 211 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 890 பேரிடம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் இன்று அதிகாலை உயிரிழந்தார். நீண்ட நாட்களாக அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார். 

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று மாலை முதற்கொண்டு தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம்தேதி வரை இந்த உத்தரவு நீடிக்கும்.

நேற்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்களுக்கு ஊரடங்கு அவசியம் என்றும் இதனை மேற்கொள்ளாவிட்டால் நாம் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இன்னும் மோசமான விளைவுகளை தமிழகம் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்களும், அறிவியலாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

.