கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 57 ஆக அதிகரித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு
- ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சி
- டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 57 ஆக அதிகரித்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது.
டெல்லி மாநாட்டில் 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 616 பேரை கண்டறிவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதம் உள்ள 616 பேரும் தாங்களாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 50 பேரில், 45 பேர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறியது தொடர்பாக 33,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23,691 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 28,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அபராதம் என்ற வகையில், ரூ. 13 லட்சத்து 99 ஆயிரத்து 800 ரூபாய் பெறப்பட்டுள்ளது.