110 பேரும் டெல்லி மாநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது
- ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது
- 110 பேரும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 234 –ஆக உள்ளது. ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். அவர்களுடன் சேர்த்து மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பர்மாவையும், ஒருவர் இந்தோனேசியாவையும் சேர்ந்தவர்கள்.
டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இதனை ஏற்று 1,103 பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அவர்களில் 658 பேருக்கு சோதனை செய்துவிட்டோம். மீதம் உள்ளவர்களுக்கு நாளைக்குள் பரிசோதனை செய்து முடிக்கப்படும். எங்களது வேண்டுகோளை ஏற்று தாமாக முன்வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.