This Article is From Apr 29, 2020

“தற்சார்பின் முக்கியத்துவத்தை பிரதமருக்கு கற்றுக் கொடுத்த கொரோனா!”- வரிந்துகட்டும் சீமான்

"என்றைக்கு இந்த தேசம் தற்சார்பு, பசுமை, தாய்மைப் பொருளாதாரத்தை கையிலெடுக்கிறதோ அன்றைக்குதான் இந்த நாடு வாழும், வளரும்"

“தற்சார்பின் முக்கியத்துவத்தை பிரதமருக்கு கற்றுக் கொடுத்த கொரோனா!”- வரிந்துகட்டும் சீமான்

"உணவும் நீரும் இல்லையென்றால் அந்த தேசத்தில் புரட்சி வந்தே தீரும்"

ஹைலைட்ஸ்

  • மோடி, கொரோனா காலத்தில் தற்சார்பு குறித்துப் பேசியிருந்தார்
  • இந்த தற்சார்பு விஷயம் குறித்து சீமான் பிரதமரை விமர்சித்திருந்தார்
  • தனது ட்விட்டரில் இது குறித்து காணொலியையும் சீமான் பகிர்ந்துள்ளார்

 சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா வைரஸ், நமக்கு நாம்தான் துணை என்பதைப் புரியவைத்துள்ளது. நாம் தற்சார்புடன் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்பதை கொரோனா நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது,” என்று பேசினார். இதை மேற்கோள்காட்டி நாம் தமிழர் கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமரை விமர்சித்துள்ளார். 

சீமான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “காந்தி போதித்தபோது வராதது, ஜே.சி.குமரப்பா முதல் காமராஜர், இந்திராகாந்தி சொன்னபோது புரியாதது, நாங்கள் 10 வருடமாக தெரு தெருவாக பேசியபோது கேட்காதது, தற்போது தற்சார்புடன் இருக்க கொரோனா கற்பித்துள்ளது என்கிறார் பிரதமர்.

ஒவ்வொன்றையும் கொரோனா தான் சொல்லணும் போல!” எனப் பதிவிட்டு ஒரு காணொலியையும் பகிர்ந்திருந்தார். 

அதில், “எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு வர்த்தக உலகம். சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தேசத்தில் மக்களும் ஒரு பண்டம்தான். என்றைக்கு இந்த தேசம் தற்சார்பு, பசுமை, தாய்மைப் பொருளாதாரத்தைக் கையிலெடுக்கிறதோ அன்றைக்குத்தான் இந்த நாடு வாழும், வளரும். இப்போது நான் சொல்வது புரியாது. ஆனால், ஒரு நாள் பசியெடுத்து தாகம் எடுத்து என்னைத் தேடுவீர்கள். இது கண்டிப்பாக நடக்கும்.

தொடர்ந்து நான் விவசாயம், விவசாயம் என்று பேசிக் கொண்டிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். அவர்கள், கார் வேண்டும், மோட்டர் பைக் வேண்டும், என்கிறார்கள். உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். உங்களைப் போன்றுதான் ஜப்பான், ஜெர்மனி என எல்லா உலக நாடுகளும் சிந்திக்கும். அனைவரும் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று நினைத்தால், யார்தான் அதை உற்பத்தி செய்வது. விவசாயத்தைக் கைவிட்ட எந்த தேசமும் நன்றாக இருந்ததாகச் சரித்திரம் இல்லை.

கார் இல்லையென்றால் எந்த நாட்டிலும் புரட்சி வராது. ஆனால், உணவும் நீரும் இல்லையென்றால் அந்த தேசத்தில் புரட்சி வந்தே தீரும். தற்சார்புடன் நாம் இல்லையென்றால் அது பேராபத்தில் போய் முடியும்,” என்று கூறுகிறார் சீமான். 

.