வழக்கு நிதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் ரவிந்திரா பட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பை கண்டறிய தனியார் ஆய்வகங்களில் ரூ.4,500 வசூல்
- தனியார் ஆய்வகங்களில் கட்டணம் வசூலிக்க கூடாதென நீதிபதிகள் உத்தரவு
- நெருக்கடியான சூழலில் தாராளத் தன்மையுடன் நடக்க வேண்டுமென அறிவுறுத்தல்
கொரோனாவை உறுதி செய்யும் பரிசோதனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சசாங்க் தியோ சுதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் ரவிந்திரா பட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், 'நாடு மிகவும் சிக்கலான தருணத்தில் உள்ளது. இந்த சூழலில் கொரோனா ஒழிப்பதற்கு தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, சேவை மனப்பான்மையுடன் கட்டணமின்றி பரிசோதனையை ஆய்வகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனைக்காக ரூ. 4,500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிய வருகிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்த நாட்டில், கட்டணத் தொகை காரணமாக, அதனை கட்ட முடியாமல் யாரும் சோதனையை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது.' என்று தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,274 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 411 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.129 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. வரும் 11-ம்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின்னர் ஊரடங்கு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.