கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 55,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
- சீனாவை கொரோனாவுக்குப் பொறுப்பாக்குவோம்: டிரம்ப்
- அமெரிக்காதான் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள் நாடு
Washington: சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி தாண்டவமாடி வருகிறது கொரொனா வைரஸ். தொற்றுக்கு மூல காரணமாக இருந்த சீனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்தித்த டிரம்ப், “சீனா மீது நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. இந்த மொத்த கொரோனா வைரஸ் விவகாரமும் தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம். அது உடனடியாக நிறுத்தப்பட்டு மொத்த உலகத்திற்கும் பரவுவதிலிருந்து தடுத்திருக்க முடியும்.
பல விதங்களில் சீனாவை இதற்குப் பொறுப்பாக்க முடியும். இது குறித்து நாங்கள் சில தீவிரமான விசாரணைகளை செய்து வருகிறோம்,” என்று கொதிப்புடன் பேசியுள்ளார் டிரம்ப்.
ஜெர்மனியில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனா, 165 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஜெர்மனியின் செய்தித் தாள் ஒன்று தங்கள் தலையங்கத்தில் வலியுறுத்தியிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, “அதைவிட மிகச் சுலபமான முறையில் சீனாவை நாம் பொறுப்பாக்க முடியும்.
ஜெர்மனியைவிட நமக்கு சீனா பன்மடங்கு அதிக தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இறுதி நஷ்ட ஈடு தொகையை நாம் இன்னும் முடிவு செய்யவில்லை. அது மிகப் பெரியதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, மொத்த உலகிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்று பதில் அளித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 55,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.