கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை தமிழகத்தில் 7-ஆக உயர்ந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் புதிதாக இன்று 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
- பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்திருக்கிறது
- கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு
தமிழகத்தில் 69 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 690-ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 690-ஆக உள்ளது.
இந்த 69 பேரில், 63 பேர் ஒரே இடத்துடன் தொடர்புடையவர்கள். மற்ற 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு சர்க்கரை நோய், இரத்த உயர் அழுத்தம் இருந்தது. அவர் சென்னையை சேர்ந்தவர்.
தமிழகத்தில் 15 வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றில் 53 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணம் அடைந்து இதுவரை 19 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
பரிசோதனை கருவிகள் போதுமான அளவில் உள்ளன. தற்போது 14 ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் உள்ளன. கூடுதலாக ஆர்டர் செய்திருக்கிறோம்.
கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிகிச்சை முறைகளில் மாற்றம் செய்யப்படும்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,630 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 961 பேருக்கு பாதிப்பு இல்லை. 33 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.