ஊரடங்கை மீறுவோர் மீதி கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
ஹைலைட்ஸ்
- ஊரடங்கை மீறினால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
- ஊரடங்கை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- இந்தியாவில் 415 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஊரடங்கைக் கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறுவோர் மீதி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவைப் பலரும் முக்கியமானதாகக் கருதவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா முழுவதும், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 80 மாவட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், வங்காளம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்வே சேவைகள், பெருநகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பால், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து இதர அனைத்து கடைகள், அலுவலகங்கள், மால்கள், சினிமாக்கள் போன்ற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பல மாநிலங்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளன, இந்த உத்தரவானது நான்கு பேருக்கு மேல் கூட்டமாகக் கூடுவதைத் தடை செய்கிறது. தடையை மீறுபவர்கள் பிரிவு 188ன் கீழ் தண்டனையை எதிர்கொள்ளலாம். அதாவது ஒரு மாதம் வரை சிறை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இத்தகைய மீறல்கள் மனித உயிருக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தால் இவை ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சில மாநிலங்கள் ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்தியாவில் 415 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. மும்பையில் இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
உலகளவில், கொரோனா வைரஸ் தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. இந்த தொற்று நோயால் 14,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.