இதுவரைக்கும் 3.95 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவது மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,791 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இன்று காலை நிலவரப்படி, 40 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் 64 பேர் பலியாகி உள்ளனர். இன்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 82 பேர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். மற்ற 33 பேர் வெளி மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு வந்தவர்கள் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பான 3,791 பேரில் 3,200 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். 479 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு வந்தவர்கள். 112 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்களை தவிர்த்து மாநிலத்தில் தற்போது 1,320 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களில் 927 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். 111 பேர் வெளிநாட்டிலிருந்தும், 282 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆந்திராவுக்கு வந்தவர்கள்.
இதுவரைக்கும் 3.95 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மில்லியனில் 7,410 பேர் என்ற கணக்கு ஆகும். கொரோனா பாதிப்பு விகிதம் மாநிலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
நோய் பாதிப்பிலிருந்து மீளும் சதவீதம் 63.49 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழப்பு 1.69 சதவீதமமாக உள்ளது.
இதற்கிடையே, தலைநகர் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள், திங்களன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளளது.
இன்று உள்துறை மற்றும் ப்ளாக் 2-ல் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கை தொடரும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.