கடந்த மார்ச்.25ம் தேதி கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில், பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். (Representational)
ஹைலைட்ஸ்
- மற்றொரு நிவாரண தொகுப்பை அறிவிக்க தயாராகும் மத்திய அரசு
- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கவனம்
- மத்திய அரசு முன்னெடுக்கும் 3வது முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
New Delhi: ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதற்கு பின்னர் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் வகையில், முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், மற்றொரு நிவாரண தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில், அந்த யோசனை நடந்து வருகிறது. இதற்காக, சில நடவடிக்கைகள் தேவைப்படலாம். அதனால், மற்றொரு நிவாரண தொகுப்பை அறிவிக்கும் வகையில், ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி, ஏதேனும் நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட சவால்களை சமாளிக்க மத்திய அரசு முன்னெடுக்கும் 3வது முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகக் கடந்த 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த குழு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மோடி கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நிர்மலா சீதாராமன், 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு, தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக ஏழைகள், கூலித்தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவித்தார்.
இந்நிலையில், ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு விலக்கப்பட்டதற்கு பிந்தைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக பல்வேறு நல்வாழ்வு திட்டங்கள் மற்றும் இதர அரசு திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது.
கல்வி உதவித்தொகை, குறுவை சாகுபடி ஆகியவை தொடர்பான அறிவிப்புகள், அந்த பரிசீலனை பட்டியலில் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக தீர்வு அறிவிக்கப்படும் என மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொருளாதார நடவடிக்கைகளை சரி செய்ய பிரதமர் மோடி நியமித்த உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு அதிகார குழு இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும், ஊரடங்கு நிலவரத்தைக் கண்காணித்து வருகிறது.