கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு உலகளவில் 86 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனாவால் முதலில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்தது
- தற்போது 60% க்கும் அதிகமானோர் தென்கொரியாவில் குணம் அடைந்துள்ளனர்
- கொரோனா தடுப்பு யுக்திகளை தென்கொரியா இந்தியாவிடம் பகிர்ந்துள்ளது
New Delhi: கொரோனாவை ஒழிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் மூன் ஜேவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக தென் கொரியா உள்ளது. இதற்காக அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனாவை பரவலை தடுப்பது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜேவுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொரோனாவை ஒன்றிணைந்து தடுப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்' என்று தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழலில் தென்கொரிய அரசு இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள், தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. இதற்காக அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதேபோன்று கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தென்கொரிய அதிபர் பாராட்டியுள்ளார்.
ஆலோசனையின்போது கொரோனாவை இணைந்து எதிர்கொள்வது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
தென்கொரியாவில் மொத்தம் 10,131 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 3 ஆயிரம் பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தென்கொரியாவில் வெகுவாக குறைந்திருக்கிறது.