நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதியை விரைவில் யுபிஎஸ்சி அறிவிக்கவுள்ளது
- 3 கட்டங்களாக நடைபெறுகிறது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள்
- கொரோனாவால் பள்ளி, கல்லூரி, பல்கலை. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
New Delhi: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டுள்ளது.
மக்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எனப் பரவலாக அழைக்கப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வின் நேர்முகத்தேர்வு மார்ச் 23-ம்தேதி முதல் ஏப்ரல் 3-ம்தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் மத்தியில் காணப்பட்டது.
இந்த நிலையில், நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. இன்று அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்ற தேர்வுகளையும் ஏப்ரல் 15-ம்தேதி வரைக்கும் ஒத்தி வைத்துள்ளது யு.பி.எஸ்.சி.
மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது எழுத்துத் தேர்வு ஆகும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.