"சாமானிய மக்கள், அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால்..."
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
- இந்தியாவில் மூவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்
- தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு இல்லை என அரசு தகவல்
உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் என்பது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கோவிட்-19 எனப்படும் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று அரசு சொல்லி வருகிறது. ஆனால், அரசு சொல்லும் இந்த தகவல் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார் மருத்துவரும், திமுக எம்எல்ஏ-வுமான சரவணன்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழக அரசு கொரோனா வைரஸ் விவகாரத்தில் சொல்லும் அனைத்தையும் நம்ப முடியவில்லை. காரணம், இவர்கள்தான் அம்மையார் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டிருந்த போது, அறிக்கை அறிக்கையாக வெளியிட்டார்கள். அவர் இட்லி சாப்பிட்டார் என்றார்கள், நீர்ச்சத்துக் குறைபாடு என்று சொன்னார்கள். கடைசியில் அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரியவந்தது.
எனவே, இதுதான் அரசின் லட்சணமாக இருக்கிறது. ஆகையால் கொரோனா பாதிப்பு குறித்து இவர்கள் தரும் அனைத்துத் தகவல்களையும் நம்ப முடியாது. சாமானிய மக்கள், அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு மருத்துவராக அந்த வைரஸின் தாக்கம் என்ன என்பது எனக்குத் தெரியும்.
அந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அது வந்துவிட்டால் 2 அல்லது 3 வாரங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு அதிக கவனம் கொடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சூழல் இப்படி இருக்கையில் தமிழக அரசு, அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நாம் மிகப் பெரும் நெருக்கடியில் இருக்கிறோம். இனி வரும் வாரங்கள் மிகச் சிக்கலானதாக இருக்கும். அரசு மீது குறை கூறவில்லை. ஆனால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.