சீனாவை முந்திய இந்தியா; கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,000ஐ நெருங்குகிறது!
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,000ஐ நெருங்குகிறது!
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,970 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு
- சீனாவை காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
New Delhi: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,970 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 85,940 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. எனினும், இன்று காலை நிலவரப்படி நாட்டில் வைரஸ் பாதிப்படைந்தவர்கள் குணமடையும் விகிதமானது 35.08 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்படைந்த 30,000 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், சீனாவில் உயிரிழப்பு விகிதம் 5.5 சதவீதமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 86 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக இந்தியாவிற்கு அளிக்க முன்வந்துள்ளது. “இந்த தொற்று நோய் தாக்குதலின்போது நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், இந்திய மக்களுடனும் துணை நிற்கின்றோம்“ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் டிவிட் செய்துள்ளார். சர்வதேச அளவில் கொரேனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 13ம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. ஜனவரி 30ம் தேதி முதல் ஏப்.14ம் தேதிக்குள் 75 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ எட்டியது. அடுத்த 8 நாட்களில் 20,000ஆக இரட்டிப்பாக அதிகரித்தது. ஏப்.23ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 20,000ஆக இருந்த நிலையில், மே.12ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 70,000ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 68 சதவீத பாதிப்பானது 18 நகரங்களிலே உள்ளது. மும்பை, டெல்லி, அகமதாபாத், புனே மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 50 சதவீத பாதிப்பு உள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 1,000 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மும்பையிலே பாதிப்பு அதிகமாக உள்ளது.
மூன்றாவது கட்ட சிறப்பு தொகுப்பு அறிவிப்பின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இது கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி அறிவித்த ரூ20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மூன்றாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் பொருளாதாரத்தை சீராக்க அதிகளவில் கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.