This Article is From Mar 24, 2020

சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்!! நிரம்பி வழியும் பேருந்துகள்!

மக்கள் எந்த இடத்தில் அல்லது நகரத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே நிலைமை சீரடையும் வரை தங்கியிருங்கள் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் கும்பலாக கூடியுள்ளனர். 

சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்!! நிரம்பி வழியும் பேருந்துகள்!

மக்களுக்கு முறையான பேருந்து வசதி அளிக்கப்பட வேண்டும் என்கிறார் ஸ்டாலின்.

ஹைலைட்ஸ்

  • மக்கள் கூடக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது
  • விழிப்புணர்வு செய்யப்பட்டபோதிலும் ஊருக்கு செல்வதில்தான் ஆர்வம் காட்டினர்
  • மக்கள் கூட்டத்தால் கொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்பு உள்ளது

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாளை மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏதோ விடுமுறை விடப்பட்டது போல எண்ணிக்கொண்டு, சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அடித்துப்பிடித்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

மக்கள் எந்த இடத்தில் அல்லது நகரத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே நிலைமை சீரடையும் வரை தங்கியிருங்கள் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் கும்பலாகக் கூடியுள்ளனர். 

அவர்களில் பலர் மாஸ்க் அணியாமல் இருப்பதையும் காண முடிகிறது. இந்த சூழலிலும் சிலர் செல்பி எடுத்துக் கொண்டு சோசியல் மீடியாவில் லைக்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தும்மினாலே அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா எளிதாகப் பரவி விடும். இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் சமூக பரிமாற்றத்தின் வழியே ஆயிரக்கணக்கானோருக்குப் பரவி, நாள்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்றவற்றின் வழியே மக்கள் அறிந்துகொண்ட போதிலும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை என்பதைத்தான் இன்றைய நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.

அதே நேரத்தில் பேருந்துகள் குறைக்கப்பட்டது, இந்த கூட்டத்திற்குக் காரணம் என்பதைத் தவிர்க்க முடியாது. இந்த நிலையில், அரசு பேருந்து இயக்கத்தை முறைப்படுத்தி மக்கள் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அச்சம், அரசு அறிவித்துள்ள 144 தடை ஆகியவை இருக்கும், இச்சூழலில் வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களைச் சாலையில் நிறுத்திச் சண்டையிட வைத்திருக்கிறது அரசு.

பேருந்துகளைக் குறைத்துவிட்டால் மக்கள் எப்படி தங்கள் ஊருக்குச் செல்வார்கள் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூடவா அரசுக்கு இல்லை? உடனடியாக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். கட்டணம் இல்லாமல் இலவசமாக அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்! என்று கூறியுள்ளார். 

மக்களுக்கு அரசு சரியான வழியில் உதவ வேண்டும்; அதே நேரம் மக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியாது. 

.