This Article is From Mar 21, 2020

புதிதாக 3 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6-ஆக உயர்வு!!

ஏற்கனவே 3 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 3 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6-ஆக உயர்வு!!

பாதிக்கப்பட்ட 6 பேரும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.

அதி தீவிர தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

தாய்லாந்தை சேர்ந்த 2 பேர் நியூசிலாந்தை சேர்ந்த ஒருவர் ஆகிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளி நாடு, வெளி மாநிலத்திலிருந்து இங்கே வந்தவர்கள். சமூக பரிமாற்றமாக தமிழ்நாட்டில் கொரோனா இன்னும் பரவவில்லை. 

அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா குறித்து தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்ற தகவல் சற்று ஆறுதலை அளிக்கிறது.

தமிழகத்தில் தாய்லாந்தை சேர்ந்த 2 பேர், ஓமன், அயர்லாந்து, டெல்லி, நியூசிலாந்திலிருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.