கான்ட்ராக்ட் வழங்கியதில் முறைகேடு செய்தார் என்று முதல்வர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
Chennai: அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகளை வழங்கி அதில் முறைகேடு செய்தார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தங்களது மனுவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ. 3,500 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முதல்வர் மீதான புகார் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு பிவுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, “ விசாரணை அதிகாரிகளான நீங்களே இந்த வழக்கில் குற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள். இதுவரை நடந்த விசாரணை குறித்த விவரத்தை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். விசாரணை அதிகாரியால் ஏன் இந்த புகார் விசாரிக்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
முதல்வருக்கு எதிரான புகாரை ஊழல் தடுப்பு பிரிவு விசாரிக்க கூடாது என்றும், சுதந்திரமாக இயங்கும் விசாரணை அமைப்புதான் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் திமுக தலைவர் ஸ்டாலின் செவ்வாயன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். ஊழல் தடுப்பு பிரிவு என்பது முதல்வரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது.
சாதாரணமாகவே 8 முதல் 10 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் திட்டங்களுக்கு ரூ. 21 கோடிக்கும் அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
உறவினர்களுக்கு முதல்வர் கான்ட்ராக்ட் வழங்கினார் என்ற குற்றச்சாட்டை மறுத்த அரசு வழக்கறிஞர், முதல்வரின் சம்பந்திக்கு கடந்த 2014-ல்தான் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் கான்ட்ராக்ட் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். எனவே இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றார்.
வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.