This Article is From May 08, 2020

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: நீளும் அறிகுறிகள் (Symptoms) பட்டியல்!

குறிப்பாக கொரோனா வைரஸானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கி, அதன் மூலம் cytokine storm  என்னும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது. 

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: நீளும் அறிகுறிகள் (Symptoms) பட்டியல்!

முதலில் தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற குளிர்க் காய்ச்சலுக்கு இருந்த அறிகுறிகளே கொரோனா வைரஸால் பாதிக்கப்படவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டது

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் உலகளவில் 38 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு
  • சீனாவின் உஹான் நகரத்திலிருந்துதான் கொரோனா பரவியதாக சொல்லப்படுகிறது
Paris:

உலகளவில் கிட்டத்தட்ட 38 லட்சம் பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை சோதனைகளால் தெரிய வந்தது மட்டுமே 38 லட்சம் என்கிற எண்ணிக்கை. சோதனை செய்யாமல், அறிகுறிகள் தெரியாமல் இன்னும் பல லட்சம் பேர் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. 

முதலில் தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற குளிர்க் காய்ச்சலுக்கு இருந்த அறிகுறிகளே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது உடலில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய அளவுக்கு தீவிரமான நோயாக கொரோனா தொற்று மாறியிருப்பதாக அஞ்சப்படுகிறது. 

குறிப்பாக கொரோனா வைரஸானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கி, அதன் மூலம் cytokine storm  என்னும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது. 

“பொதுவாக வைரஸ் தொற்று இரண்டு வகைகளில் உடலில் நோயை உருவாக்கும். ஒன்று, உடல் திசுக்களைத் தாக்கி, மேலும் பெருகும். இன்னொன்று, நோய்க்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும்,” என்கிறார் கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைராலஜி விரிவுரையாளர் ஜெரமி ரோஸ்மேன்.

சமீபத்தில் நியூயார்க், லண்டன் மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களில் மிகவும் அரிதான inflammatory disorder நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பல குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இதற்குக் கூட கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த inflammatory disorder மூலம் இளவயதுடையவர்களின் உறுப்புகள் செயல்படுவது நிற்கக்கூடும்.

கொரோனா வைரஸால் இதய பாதிப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்புகளும் வர வாய்ப்புள்ளதாக சில மருத்துவ ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். 

இதுமட்டுமல்லாமல், கொரோனா பாதித்த ஆண்களின் பிறப்புறுப்புகளில் ‘பெரும் மாற்றங்கள்' நிகழ்ந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  இது சம்பந்தப்பட்ட ஆய்வு, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், நோய் குணமடைந்த பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்,” என்று அறிவுறுத்தியுள்ளது. 

“முதலில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடிக்க தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பவர்களை சோதிக்க சொன்னார்கள். ஆனால், மூக்கிலிருந்து சலி வந்து கொண்டே இருப்பது, தொண்டை வலி உள்ளிட்டவைகளும் கொரோனா அறிகுறி என்றார்கள். பின்னர் செரிமானப் பிரச்னை, வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கும் கொரோனா அறிகுறிகளாக இருக்கும் என்றார்கள். அதைத் தொடர்ந்துதான் எந்த வகையில் வேண்டுமானாலும் கொரோனா அறிகுறி இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம்.” என்று பாரிஸைச் சேர்ந்த மருத்துவர் சில்வி மோனோய் கூறுகிறார். 

ஆனால் இதுவரை காய்ச்சல், இருமல், குளிர் எடுப்பது, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போன்றவைகள்தான் கொரோனாவுக்கான பொது அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. 

அதே நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கு பொதுவாக சொல்லும் அறிகுறிகளைத் தாண்டி, வயிற்றுப் போக்கு, வாந்தி, மார்பு அல்லது வயிற்றுப் பகுதியில் வலி, மூக்குச் சலி, வறட்டுத் தொண்டை வலி, குழப்பமான மனநிலை உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக மிகச் சிலருக்கு ருசி இல்லாமல் போவது, சுவாசத்தில் நுகர்வு திறன் இல்லாமல் போவது உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. 


 

.