This Article is From Jul 09, 2020

கொரோனா வைரஸின் 2வது அலையை சீனா எப்படி சமாளிக்கிறது? - விரிவான அலசல்!

வூஹானில் முதன்முதலாக கொரோனா தொற்றுப் பரவியபோது போடப்பட்டது போல முழு முடக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை சீனா.

கொரோனா வைரஸின் 2வது அலையை சீனா எப்படி சமாளிக்கிறது? - விரிவான அலசல்!

பெய்ஜிங்கில் தொற்று அதிகமுள்ள பகுதிகளிலும் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
  • சீனாவில் சமீபத்தில் கொரோனாவின் 2வது அலை உருவானது
Beijing, China:

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் 4,500-க்கும் மேற்பட்டோரின் உயிரை பலி வாங்கியது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. 

பின்னர் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவை முழுவதுமாக ஆட்கொண்டது. தற்போது கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா. சீனாவில் படிப்படியாக வைரஸின் தாக்கம் குறைந்ததால், மக்கள் மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். 

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சீனாவில் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சரியாக கையாண்ட சீனா சாமர்த்தியமாக இதனை முடக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதலே சீனா கொரோனாவின் இரண்டாவது அலைக்குத் தயாராகிவிட்டது.

அதற்கேற்றார்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியது. பொருளாதாரத்தை மேம்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில்களை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து விதிகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து பலர் தங்கள் தொழில்களைச் செய்துவந்தனர்.

தலைநகர் பெய்ஜிங்கில்தான் கொரோனாவின் இரண்டாம் அலை உருவானது. இதையடுத்து, பெய்ஜிங்கில் முதற்கட்டமாக வீட்டுக்கு வீடு சோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 கோடி மக்கள்தொகை கொண்ட பெய்ஜிங் நகரில் மருத்துவ ஊழியர்கள், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா அதிகமாக உள்ள மாகாணங்களிலிருந்து பிற மாகாணங்களுக்கு மக்கள் செல்வது தடுக்கப்பட்டது. அப்படிச் செல்ல விரும்புபவர்கள், கொரோனா நெகட்டிவ் என்கிற சோதனை முடிவைக் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சீன அரசு உத்தரவிட்டது. 

வூஹானில் முதன்முதலாக கொரோனா தொற்றுப் பரவியபோது போடப்பட்டது போல முழு முடக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை சீனா. அதற்கு பதிலாக பெய்ஜிங்கில் தொற்று அதிகமுள்ள பகுதிகளிலும் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில இடங்கள் மட்டும் முற்றிலும் மூடப்பட்டன. ரெஸ்டாரெண்ட்கள், பப்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல பொது இடங்கள் திறக்கப்பட்டாலும் அங்கு சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்துறையும் செயல்பட சீன அரசு அனுமதி அளித்தது.

சீனாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டாலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. பயணத்துக்குப் பின் பதினைந்து நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நடவடிக்கைகள் பயனளித்திருப்பதாகவே தெரிகிறது. காரணம், அதிகமாக இருந்த கொரோனா தொற்று, ஜூலை முதல் வாரத்தில் ஒற்றை இலக்கில் குறைந்தது. கடந்த 3 நாட்களாக பெய்ஜிங்கில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. 

தெற்கு பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபடி சந்தையுடன் தொடர்புடைய 335 பேர் கொரோனா தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டனர். இதுவே இரண்டாவது அலையின் தொடக்கமாக இருந்தது. இதனையடுத்து அந்த சந்தை உடனடியாக மூடப்பட்டது. சந்தைக்குச் சென்றுவந்த நபர்களை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் அந்த சந்தையில் இருந்து ஏற்படவிருந்த கொரோனா பரவல் பெருமளவு தடுக்கப்பட்டது.

'உலகில் எந்த நாட்டுக்கும் சீனாபோல கொரோனாவை சாமர்த்தியமாகக் கையாளும் பொருளாதார வலிமை, சாதுர்யம், மருத்துவ வசதி கிடையாது' என சிங்கப்பூர் நோய்த்தொற்று தடுப்பு வல்லுநர் லியாங் ஹோ நாம் தெரிவித்துள்ளார்.
 

.