"கொரோனா தொற்று பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவருக்கு மட்டும்தான், நோய் தொற்று மிகவும் வீரியமாக பாதிக்கிறது."
ஹைலைட்ஸ்
- கொரோனா வைரஸ் தொற்று குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது
- கோவிட்-19 தொற்று இப்போதுதான் முதன்முதலில் மனிதர்களுக்குப் பரவியுள்ளது
- கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இந்த தொற்று மனிதர்களுக்குப் பரவியது
New Delhi: கொரோனா வைரஸால் உலகமே தத்தளித்து வரும் சூழலில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளது.
“கோவிட்-19 என சொல்லப்படும் கொரோனா வைரஸ் இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன. வைரஸ் தாக்கிய பின்னர் இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு வெளியில் தெரிய ஆரம்பிக்கும்,” என்று சிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதிய அறிகுறிகளாக, உடல் மிகுந்த குளிர்ச்சியாக மாறி உதறத் தொடங்குவது, தசை வலி, தலை வலி மற்றும் சுவையோ அல்லது சுவாச உணர்வோ இருக்காது என்று பட்டியலிடப்பட்டுள்ளன. சிடிசி, கொரோனா வைரஸுக்கு இந்த அறிகுறிகள் இருக்கும் என்று தெரிவித்திருந்தாலும், உலக சுகாதார அமைப்பு இது குறித்து எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
உலக சுகாதார அமைப்பு, “காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவை கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஆகும்,” எனத் தெரிவிக்கிறது.
பொதுவாக கொரோனா வைரஸ் இருந்தால், காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமென்று சிடிசி மற்றும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த அறிகுறிகள் மட்டும்தான் வரும் என்று சொல்வதற்கில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகி தெளிவு பெற வேண்டும் என்றும் சிடிசி விளக்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் ஏற்பட்டது. இதுவரை மனிதர்களுக்கு கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில்லை. இதனால், அதை இன்றளவும் விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.
“கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் சுமார் 80 சதவிகித மக்கள் எந்தவித சிகிச்சை தேவையுமின்றி தொற்றிலிருந்து குணமடைந்து விடுகிறார்கள். கொரோனா தொற்று பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவருக்கு மட்டும்தான், நோய் தொற்று மிகவும் வீரியமாக பாதிக்கிறது.
குறிப்பாக வயதானவர்கள், ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள், நீரிழிவு, புற்று நோய் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகள் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்,” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.