கணினியின் உதவி கொண்டு டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்யும்போது ஏற்படும் மாற்றங்களை கண்காணித்துள்ளனர் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.
ஹைலைட்ஸ்
- சீனப் பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது
- ஆய்வு முடிவுகள் பிரிசுரிக்கப்பட்டுள்ளன
- ஆய்வு முடிவுகள் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்
Beijing: அடுத்த முறை கழிவறையின் கோப்பையை (மேற்கத்திய வகை கழிவறை) நீங்கள் ஃப்ளஷ் செய்யும்போது, அதன் மூடியை சாத்திவிட்டு ஃப்ளஷ் செய்யுங்கள். காரணம் சீனாவில் உள்ள யங்சாவ் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், தொற்றால் பாதிக்கப்பட்ட மனித மலத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்கிற அதிர்ச்சிகர தகவலைத் தந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை பிடிஐ செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது.
ஜர்னல் ஆஃப் ஃபிசிக்ஸ் அண்டு ஃப்ளூயிட் என்கிற இதழில் இந்த ஆய்விற்கான முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கணினியின் உதவி கொண்டு டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்யும்போது ஏற்படும் மாற்றங்களை கண்காணித்துள்ளனர் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.
டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும்போது, கண்ணுக்குத் தெரியாத பல நுண் கிருமிகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு காற்றில் கலக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களின் ஒருவரான ஜி- ஷியாங் வாங், “டாய்லெட் ஃப்ளஷ் செய்யப்படும்போது, மனித மலத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகள் காற்றில் கலக்க நேரிடும். இந்த காரணத்தினால் டாய்லெட்டின் மூடியை முதலில் மூடிவிட்டுப் பிறகுதான் ஃப்ளஷ் செய்ய வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் வீடுகளிலோ அல்லது ஜன நெருக்கடி அதிகம் இருக்கும் பகுதிகளிலோ பயன்படுத்தப்படும் டாய்லெட்டில் இந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.” என்று கூறுகிறார்.
பொதுக் கழிப்பிடங்கள் மூலம் சில வைரஸ் கிருமிகள் பரவும் என்று தெரிந்திருந்தாலும், கோவிட்-19 வைரஸும் இப்படி பரவுமா என்று உறுதிபட தெரியவில்லை. அது குறித்து அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்ரோ பயாலஜிஸ்ட் சார்லஸ் பி.கெர்பா, ‘கழிவறைகள் மூலம் வைரஸ் பரவவே பரவாது என்று சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவுக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து தெளிவான தரவுகள் இல்லை. டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும்போது வைரஸ் கிருமி பரவுகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அவை உடலில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கோ வகையிலோ இருக்குமா என்கிற கேள்வியும் உள்ளது,' என்று ஆய்வு முடிவு குறித்து சந்தேகம் எழுப்புகிறார்.
பிரிஸ்டால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர், பிரியன் ஸ்தெக், ‘வைரஸ் கிருமி, டாய்லெட் ஃப்ளஷ் செய்வதால் மனிதர்களுக்குப் பரவுகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. மலத்தில் இருந்து வைரஸ் கிருமிகள் பரவுகிறது என்பதற்கு இதுவரை வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை,' என்று முடிக்கிறார்.
(With inputs from Washington Post and PTI)