மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது
- ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன
- தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், மாநிலத்துக்கு உள்ளே இயக்கப்படும் பேருந்து சேவை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,168 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,38,470 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,617 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 89,532 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,969 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,966 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு, ‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மாண்புமிகு அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது.
தமிழ்நாடு அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' எனத் தெரிவித்துள்ளது.