This Article is From Mar 28, 2020

'இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும்' - மருத்துவத்துறை வல்லுநர் கருத்து

மூத்த மருத்துவர்களால் நோயாளிகளைத் தொட முடியாது. ஏனென்றால் அவர்கள் 50 வயதைத் தாண்டியிருப்பார்கள். கொரோனா தொற்று நோய் என்பதால், 50 வயதுக்கு அதிகமானோரைத் தாக்கினால் இறப்புக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.

'இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும்' - மருத்துவத்துறை வல்லுநர் கருத்து

கொரோனாவை எதிர்கொள்ள நமக்கு ஒன்றரை லட்சம் மருத்துவர்கள் தேவை என்கிறார் தேவி ஷெட்டி

Bengaluru:

கொரோனா வைரஸை எதிர்கொள்ள இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும் என்றும், இதற்காக அவர்களது தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். 

பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி பிரசாத் ஷெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், அங்கு இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். அவர்களின் சேவை அடிப்படையில் அவர்களுக்குத் தேர்வு மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் மருத்துவர்களின் அதிகப்படியான தேவை பூர்த்தி செய்யப்பட்டது. 

இதேபோன்று இத்தாலியில் மாணவர்களுடைய 9 மாத படிப்பை நிறுத்தி விட்டு 10 ஆயிரம் மாணவர்களை மருத்துவர்களாக பணிக்கு அமர்த்தியது. 

கொரோனாவுக்கு எதிரான போரை இளம் மருத்துவர்கள், இளம் செவிலியர்களால் மட்டுமே வெல்ல முடியும். 

மூத்த மருத்துவர்களால் நோயாளிகளைத் தொட முடியாது. ஏனென்றால் அவர்கள் 50 வயதைத் தாண்டியிருப்பார்கள். கொரோனா தொற்று நோய் என்பதால், 50 வயதுக்கு அதிகமானோரை தாக்கினால் இறப்புக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. 

கொரோனா பிரச்சினையைச் சமாளிக்கும் அளவுக்கும் நம்மிடம் மருத்துவர்கள் இல்லை. நமக்கு நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, நாம் இங்கிலாந்து, இத்தாலியிடம் இருந்து பாடம் பெற வேண்டும். மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும். 

இவ்வாறு தேவி பிரசாத் ஷெட்டி கூறியுள்ளார். 

.