கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் சீனாவை இத்தாலி பின்னுக்கு தள்ளியுள்ளது.
Rome: இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 101 வயது தாத்தா ஒருவர், சிகிச்சை பலன் அளித்து குணம் பெற்றுள்ளார். இது மற்ற நோயாளிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல மருத்துவ வசதிகள் கொண்ட இத்தாலி நாட்டில் 80,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு 8,215 ஆக உள்ளது.
அதாவது 10 பேருக்கு பாதிப்பு என்றால், அவர்களில் ஒருவர் நிச்சயமாக மரணத்தை சந்திக்கிறார்.
கொரோனா முதியவர்களைத்தான் அதிகம் கொல்கிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் 60 அல்லது அதற்கும் அதிகமான வயதை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், 101 வயது முதியவர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்பாக ரோமின் ரிமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. மிகவும் முதியவர் என்பதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றுதான் மருத்துவர்களும் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, முதியவர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக நீங்கியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. இது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.
நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதியவரை குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் அழைத்துச் சென்றனர். 101 வயதில் உடல் பலவீனம் அடைந்திருந்தாலும், தாத்தாவின் மன உறுதிதான் அவரை கொரோனாவில் இருந்து மீட்டெடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் சீனாவை இத்தாலி பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.