This Article is From Mar 25, 2020

கொரோனா பரவலில் மக்களின் அலட்சியம்… பிரஸ் மீட்டில் ஆதங்கப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 11 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலில் மக்களின் அலட்சியம்… பிரஸ் மீட்டில் ஆதங்கப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!!

உலக அளவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு
  • மதுரையைச் சேர்ந்த நபர் இன்று காலை காலமானார்

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் இன்று அதிகாலை அங்குள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த தொற்று காரணமாகத் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் மரணம் இது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த அந்த நபர் நீண்ட நாட்களாக "கட்டுப்பாடற்ற நீரிழிவு" நோயுடன் இருந்துவந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள போதும் மக்கள் தொடர்ந்து அலட்சியமாக இருப்பது ஆதங்கமாக இருக்கிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கடுகடுத்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

மதுரையில் இறந்த நபர் குறித்து அவர், ”எங்களுடைய சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் மதுரை, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் -19 பாசிட்டிவ் நோயாளி காலமானார். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை, உயர் இரத்த அழுத்தத்துடன் கூடிய கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் மருத்துவ வரலாறு இருந்தது" என்று வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று வந்த தகவலின்படி மூன்று பெண்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது மாநிலத்தின் மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 11 ஆக அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், “நான் முதலிலிருந்தே ஒரு விஷயத்தைச் சொல்லி வருகிறேன். நீரிழிவு நோய் இருப்பவர்கள், நாள்பட்ட நோய் இருப்பவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று சுலபமாக வந்துவிடும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதைப் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பவர்கள், வயதானவர்கள் ஆகியோர் கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனாலும், மக்கள் கொரோனா தொற்றை அலட்சியப்படுத்துகிறார்கள். இதை ஆதங்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். 

உலக அளவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாநில, மத்திய அரசுகள் சொல்வதை, உலக சுகாதார அமைப்பு சொல்வதைக் கேட்டு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என படபடப்புடன் தெரிவித்தார். 

.