This Article is From Mar 30, 2020

ஊரடங்கால் மருத்துவ உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில் சிக்கல்!!: NDTV Exclusive

மத்திய மாநில அரசுகளின் மருத்துவ உபகரணங்களின் தேவையை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் எச்.எல்.எல். நிறுவனம்தான் பூர்த்தி செய்து வருகிறது.

ரயில்வே மருத்துவமனைகளுக்காக 13 ஆயிரம் மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • 21 நாட்கள் ஊரடங்கால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
  • மருத்துவ உபகரணங்களை எச்.எல்.எல்.-யிடம் தென்மேற்கு ரயில்வே கேட்டுள்ளது
  • ஊரடங்கை காரணம் காட்டி, உபகரணங்கள் வர 30 நாட்கள் ஆகலாம் என்கிறது HLL
New Delhi:

இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால், மருத்துவ உபகரணங்கள் அளிப்பதில் ஒரு மாதம் வரை, தாதமதம் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் மருத்துவ உபகரணங்களின் தேவையை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் எச்.எல்.எல். நிறுவனம்தான் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் முக கவசம், கையுறை உள்ளிட்டவற்றை பல்வேறு மாநில அரசுகள் ஆர்டர் செய்துள்ளன.

அந்த வகையில், தென்மேற்கு ரயில்வே தங்களுக்கு 13 ஆயிரம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அளிக்குமாறு ஆர்டர் செய்திருந்தது. இதற்கு பதில் அளித்து எச்.எல்.எல். தரப்பிலிருந்து மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது-

மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளன. ஊரடங்கு உத்தரவால் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் உள்ளது. மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும், அரசு அமைப்புகளும் ஏற்கனவே ஆர்டர் செய்திருக்கின்றன. 

எனவே நீங்கள் ஆர்டர் செய்த 13 ஆயிரம் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு குறைந்தது 25 முதல் அதிகபட்சம் 30 நாட்கள் வரை ஆகலாம். 

இவ்வாறு அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊரடங்கு உத்தரவு மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பையும் பாதித்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

முன்னதாக அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், 60 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 4 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்தும் இவற்றை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 11.95 லட்சம் N95 முக கவசங்கள் உள்ளன. நாள்தோறும், இந்த வகை முக கவசங்கள் 50 ஆயிரம் எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகின்றன. இதனை ஒரு லட்சமாக அடுத்த வாரத்திற்குள் உயர்த்துவோம் என்று அரசு கூறியுள்ளது. 

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 லட்சம் N95 முக கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் தற்போது இருக்கும் N95 கவசங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். இந்த எண்ணிக்கைதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டெண்டர்களை எச்.எல்.எல். தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு 20 லட்சம் பாதுகாப்பு ஆடை, 20 லட்சம் பாதுகாப்பு கண்ணாடி, 50 லட்சம் N95 முக கவசங்கள், 4 கோடி எண்ணிக்கையில் 3 அடுக்கு அறுவை சிகிச்சை முக கவசங்கள், 40 லட்சம் கையுறைகள், 10 லட்சம் சானிட்டைஸர் பாட்டில்கள் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளது. 

.