இந்த செயலால் மக்கள் கொதிதெழுந்துள்ளனர்.
Chennai: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.46 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி ஒருவரின் இறந்த உடலை அவசர அவசரமாக குழிக்குள் தள்ளும் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது விசாரணையை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.
உடல் முழுவதும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த நான்கு அரசு ஊழியர்கள் ஆம்புலன்சிலிருந்து இறந்த ஒருவரின் உடலை வெளியில் எடுத்து பின்னர் முன்கூட்டியே வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் அந்த உடலினை வீசும் காட்சிகள் 30 விநாடி வீடியோவில் தெளிவாக தெரிகின்றது. மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மேலாடைகள் ஏதும் இன்றி இறந்தவரின் உடல் இருந்தது. குழிக்கு வீசும்போது இறந்தவரின் உடலை சுற்றியிருந்த வெறும் வெள்ளை துணி விலகுவதை வீடியோவில் காண முடிகிறது. இது தொற்று பரவும் அபாயத்தினை அதிகரிக்க செய்யும்.
"இறந்த உடலை கண்ணியமாக அப்புறப்படுத்துவது முக்கியமானதாகும். இறந்தவருக்கு இத்தகைய அவமதிப்பு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் 500 வது பிரிவின் கீழ் குற்றமாகும். இறந்த நபரை அவதூறு செய்ததற்காக சுகாதார ஊழியர்களும் அந்த மேற்பார்வை ஊழியர்களும் தண்டிக்கப்படுவார்கள்," என ஊழலுக்கு எதிரான இந்தியா என்கிற இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்த்குமார் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சர்சைக்குரிய இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி ஆட்சியர் அருண், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இது கவலையளிக்கக்கூடிய சம்பவமாகும். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு மெமோ அனுப்பியுள்ளதாகவும் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட இருப்பதாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதே போல சென்னையிலும் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதில் சர்ச்சை எழுந்தது. இடுகாட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்கள், மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் விவாத்தினை கிளப்பியதையடுத்து, தமிழக அரசு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளைத் தடுக்கும் அல்லது தடுக்க முயற்சிக்கும் எவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசாணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.