ஊரடங்கால் தேசிய வேலைவாய்ப்பு திட்ட பணிகள் முடங்கியுள்ளன.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
- கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட பணிகள் நடைபெறவில்லை
- பணியாளர்களுக்கு 21 நாட்கள் ஊதியத்தை முன்கூட்டி வழங்க சோனியா கோரிக்கை
New Delhi: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு 21 நாட்களுக்கான ஊதியத்தை முன் கூட்டியே வழங்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-
நாட்டில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு 21 நாட்களுக்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்குங்கள். இந்த சிக்கலான நேரத்தில், இந்த ஊதியத்தொகை அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
ஊரடங்கால் கிராம மக்கள் வேலைவாய்ப்பு திட்டப் பணியில் ஈடுபடவில்லை. மற்ற பணிகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
நாட்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் 8 கோடி கிராம மக்களுக்கு உடனடியாக ஊதிய தொகையை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் MGNREGA திட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறதி செய்யும் விதமாக மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.