This Article is From Apr 18, 2020

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மூடிமறைத்ததா சீனா..? - தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதில்!

உலக சுகாதார அமைப்பான WHO-வுடன் சீனாவுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதைக்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மூடிமறைத்ததா சீனா..? - தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதில்!

சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் தரப்பும், பிரான்ஸ் நாட்டு அதிபரான இமானுவேல் மாக்ரனும், சீனா, கொரோனா விவகாரத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்பினர். 

ஹைலைட்ஸ்

  • WHO-வுடன் சீனாவுக்கு நெருக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது
  • இதைக் காரணம் காட்டி அமெரிக்கா, WHOக்கு அளித்த நிதியை நிறுத்த உத்தரவு
  • கொரோனா விவகாரத்தில் சீனா உண்மையை மறைக்கிறது: டிரம்ப்
Beijing:

சீனாவின் உஹான் நகரம்தான், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் மையமாக இருந்தது. தற்போது உஹான் நகரம், கொரோனாவிலிருந்து விடுபட்டு மீண்டு வந்திருக்கிறது. ஆனால், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என்று சீன அரசு கணக்குக் காட்டியதைப் பலரும் சந்தேகக் கண்ணோடுப் பார்த்து வருகின்றனர். சிலர், பகிரங்கமாக சீனா மீது குற்றம் சாட்டினர். 

இப்படிப்பட்ட சூழலில், உஹானில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது சீன அரசு தரப்பு. இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் தவறு நடந்து விட்டதாகவும், அதனால்தான் தற்போது அதன் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் காரணம் சொல்லப்படுகிறது. 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை என்றும், பல்வேறு விவகாரங்களை மூடி மறைத்ததாகவும் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், சீனாவின் சோதனைக் கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றது. 

சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் தரப்பும், பிரான்ஸ் நாட்டு அதிபரான இமானுவேல் மாக்ரனும், சீனா, கொரோனா விவகாரத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்பினர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜாவ் லிஜியான் விளக்கம் அளித்துள்ளார். “கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பக்கட்டத்தில் அதைக் கட்டுக்குள் வைக்க நாங்கள் சிரமப்பட்டோம் என்பது உண்மைதான். அதனால்தான், அப்போது நிகழ்ந்த மரணத்தை சரியாகப் பதிவு செய்ய முடியவில்லை. தற்போது அதைத் திருத்தியுள்ளோம். கொரோனா விவகாரத்தில் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. மூடி மறைக்கப் போவதுமில்லை,” என்று விளக்கினார்.

உலக சுகாதார அமைப்பான WHO-வுடன் சீனாவுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதைக் காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பிற்கு, தன் அரசு சார்பில் கொடுத்து வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். 

இதற்கு ஜாவ், “சீனாவின் நன்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இப்படி சொல்லப்படுகிறது,” என்கிறார். 

உஹான் நகர நிர்வாகம், மரண எண்ணிக்கை விவகாரம் குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி, உஹானில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையில் 1,290 பேரை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உஹானில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,869 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது உஹானில் கொரோனா மரணங்கள் தவறுதலாகக் கணக்கிடப்பட்டது குறித்து அந்நகர அரசு, ‘கொரோனா வைரஸ் பூதாகரமான போது, அரசு பணியாளர்களால் அனைத்து விஷயங்களையும் சரியாக கையாள முடியவில்லை. பல நேரங்களில் முக்கிய விவகாரங்கள் தாமதகாவும், சில நேரங்களில் ஆவணப்படுத்தப்படாமலும் போனது. ஆரம்பக் கட்டத்தில் எங்களால் எல்லோருக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிலர், வீட்டிலேயே கொரோனா தொற்றால் இறந்து போனார்கள். அது குறித்தும் சரியாக பதிவு செய்யப்படவில்லை,' என விளக்கம் கொடுத்துள்ளது.

சீனாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் பரவலை, அந்நாடு தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. வரலாறு காணாத பெரும் ஊரடங்கு உத்தரவு மூலம் அதைச் சாத்தியப்படுத்தியது சீனா. ஆனால் மற்ற நாடுகளுக்கு வைரஸ் தொற்றுப் பரவும் வரை சீனா கறார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

.