This Article is From Jul 08, 2020

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது: ஒப்புக்கொண்ட உலக சுகாதார அமைப்பு!

உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க, இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது.

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது: ஒப்புக்கொண்ட உலக சுகாதார அமைப்பு!

தற்போதைய ஆய்வின் மூலம், கொரோனா வைரஸானது காற்றில் பல மணி நேரம் சஸ்பெண்டு ஆகியிருக்கும் என்றும், பல மீட்டர்கள் பயணிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது
  • உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா
  • கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம்
Geneva:

காற்றின் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரையில் உலகம் முழுவதும், 5,38,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். மேலும், 11.6 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வழிகாட்டு பரிந்துரைகளின்படி, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும், அருகிலிருக்கும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தும்மல் மற்றும் இருமலின் போது வெளிவரும் நீர்த்துளிகள் காற்றில் பரவி அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று 239 சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதற்கு ஏற்றாற்போல வழிகாட்டு பரிந்துரைகளை மாற்ற வேண்டும் என்று விஞ்ஞானிகள், உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், காற்றின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க, இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது. இதைத்தான் உலகின் பல நாடுகள் பாதுகாப்பு நடைமுறையாக பின்பற்றி வருகின்றன. ஆனால் தற்போதைய ஆய்வின் மூலம், கொரோனா வைரஸானது காற்றில் பல மணி நேரம் சஸ்பெண்டு ஆகியிருக்கும் என்றும், பல மீட்டர்கள் பயணிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு தொற்றுநோய் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவே கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவு முறைகளில் ஒன்றாகக் காற்றின் மூலம் பரவுதல் மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றிய பரிந்துரைகள் வழங்குவதற்கு நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

இவரைத் தொடர்ந்து பேசிய நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப தலைவர் பெனடெட்டா அல்லெக்ரான்ஸி, கூறுகையில், ‘காற்றின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. பொது இடங்களில் காற்றின் மூலம் கொரோனா பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை நாங்கள் நம்புகிறோம்' என்றுள்ளார் 

இது குறித்து மேலும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாயன்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு பிரேசில் அதிபர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்துள்ளது.

தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியெசஸ், “கொரோனா தொற்றுப் பரவானது குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. கொரோனா தொற்றானது இன்னும் உச்சத்தைத் தொடவில்லை. 

உலகளவில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்பு சற்றுக் குறைந்துள்ளது. சில நாடுகள் இந்தப் பிரிவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. சில நாடுகளில் தொடர்ந்து அதிக உயிரிழப்புகள் உள்ளன. கொரோனா வைரஸ், உலகத்தையே தன் பிடியில் வைத்துள்ளது,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கிடையில், விலங்கு சுகாதார நிபுணர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணரை இந்த வாரம் சீனாவிற்கு அனுப்புகிறது உலக சுகாதார அமைப்பு. இந்தக் குழு, கொரோனா வைரஸ், விலங்குகளிலிருந்து எப்படிப் பரவியது என்பது குறித்து விசாரணை செய்யும். 
 

.