சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
New Delhi: காஷ்மீர் பகுதியை பார்வையிட சென்ற சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாக்கல் செய்தார். தொடர்ந்து, இந்த மசோதா மீது விவாதமும் நடந்து இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அவர்கள் இருவரும் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருவரையும் திரும்பி அனுப்பும் முயற்சிகள் நடந்து வருகிறது, எனினும் அவர்கள் திரும்பி செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இருவரும் விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அவர்களது சக நிர்வாகியான முகமது யூசப் தாரிகாமியை சந்திக்க அனுமதி பெற்றே ஸ்ரீநகர் புறப்பட்டனர். எனினும், அவர்கள் இருவரும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சீதாரம் யெச்சூரி கூறும்போது, "ஸ்ரீநகருக்குள் நுழைய அனுமதிக்காத ஒரு சட்ட உத்தரவை அவர்கள் எங்களுக்குக் காட்டினர். பாதுகாப்பு காரணங்களால், நகரத்திற்கு நுழைவதற்கு அனுமதி இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. எனினும், நாங்கள் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக, காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்க, டெல்லியில் இருந்து, காஷ்மீர் சென்ற காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவர், டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.