தமிழகத்தின் பல பகுதிகளில் விதி மீறல்கள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
Chennai: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த பட்டாசு வெடிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் பல இடங்களில் மீறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.
கோவை மற்றும் திருப்பூரில், விதி மீறல் அதிகம் நடந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அதிக எண்ணிக்கையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடித்தபோது, 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். தினக்கூலி செய்பவரின் மகனான அவர், பட்டாசு வெடித்தபோது மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. சிறுவனின் நண்பர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அரசு அனுமதிக்காத பகல் 12 மணிக்கு மகனை அவர் பட்டாசு வெடிக்க அனுமதித்துள்ளார்.
விதி மீறல்கள் குறித்து சென்னையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்வேதா நாராயண் கூறுகையில், சென்னையில் எங்கேயும், எப்போதும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக புகார்கள் அளித்திருக்கிறேன். ஆனால் போலீசார் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காலை 6-7 மற்றும் மாலை 7-8 ஆகிய 2 மணி நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.