நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது
Udhampur, Jammu and Kashmir: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் உதாம்பூரில், சி.ஆர்.பி.எப் துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், தன்னுடன் பணி புரிந்து வந்த சக வீரர்கள் 3 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தன்னையும் அவர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சி.ஆர்.பி.எப் தரப்பில் மூத்த அதிகாரி ஹரிந்தர் குமார், ‘இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் இறந்துள்ளனர். தன்னையே சுட்டுக் கொண்ட அந்த சி.ஆர்.பி.எப் வீரர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த போகர்மல், டெல்லியைச் சேர்ந்த யோகேந்திர ஷர்மா, ஹரியானவைச் சேர்ந்த உமத் சிங் ஆகியோர்தான் இந்த சம்பவத்தில் இறந்த வீரர்கள் ஆவர்.
நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், சி.ஆர்.பி.எப் கான்ஸ்டெபிள் அஜித் குமாருக்கும், சக வீரர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது, என்று கூறுகிறார் சி.ஆர்.பி.எப் முகாமில் இருந்த மூத்த அதிகாரி ஒருவர்.
கான்பூரைச் சேர்ந்த அஜித் குமாருக்கு, முகாமுக்கு அருகில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, ஸ்ரீநகரில் இருக்கும் பாந்த்சவுக் சி.ஆர்.பி.எப் முகாமில் நடந்த இதைப் போன்ற ஓர் சம்பவத்தில், இரண்டு சக வீரர்களை சி.ஆர்.பி.எப் வீரர் கொன்றார். தன்னையும் அவர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் அதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதேபோன்று செப்டம்பர் 2018-ல், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காசியாபாத்தில், சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
(PTI & ANI தகவல்களை உள்ளடக்கியது)