கொரிந்த் கால்வாய் வழியாக பயணிக்கும் பிரேமர் குரூஸ் லைனர்.
கடந்த வாரம் மிகப் பெரிய குரூஸ் கப்பல் ஒன்று குறுகிய கோரிந்த் கால்வாய் வழியாக பயணித்து, சாதனைப் படைத்துள்ளது. 22.5 மீட்டர் அகலம் கொண்ட பிரெய்மர் குரூஸ் லைனர் எனும் பயணியர் கப்பல், இருபக்கமும் பாறைகளாலான சுவற்றின் நடுவில், 24 மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட கோரிந்த் கால்வாயைக் கடந்த நீளமான கப்பல் என ஃப்ரெட் ஆல்சென் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், ஃப்ரெட் ஆல்சென் நிறுவனம் தனது Facebook பக்கத்தில், "இன்று கொரிந்த் கால்வாய் வழியாக பயணித்த மிக நீண்ட கப்பலாக பிரெய்மர் வரலாற்றைப் படைத்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளது. அதோடு, குறுகிய கால்வாயை நெறுங்கிக் கடக்கும் குரூசரின் புகைப்படங்களையும் வெளியிட்டது.
கோரிந்த் கால்வாயானது 6.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கால்வாய் கொரிந்து வளைகுடாவை சரோனிக் வளைகுடாவுடன் இணைக்கிறது. மேலும், இது பெலோபொன்னிசோஸை கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது.
மெட்ரோ நியூஸில் வெளியான செய்தியின் படி, 24,000 டன் எடை கொண்ட பிரெய்மர் குரூஸ் லைனர் 1,200-க்கும் மேற்பட்ட பயணிகளையும் குழு உறுப்பினர்களை ஏற்றிச் சென்றுள்ளது. கப்பலில் இருந்தவர்கள், சில நேரங்களில் கால்வாயின் பக்கங்களைத் தொட முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்வாய் வழியாக பயணிக்க குரூசருக்கு உதவியாக ஒரு டக்போட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரெய்மர் குரூஸ் லைனர் கப்பல் கால்வாயைக் கடக்கும் வீடியோவை யூடியூபில் 7 லட்சம் முறைக்கும் மேலாகப் பார்க்கப்பட்டுள்ளது.
CNN-ல் வெளியான தகவலின் படி, “ஃப்ரேட் ஆல்சென் நிறுவனத்தின் 171 வருட வரலாற்றில் இந்த நிகழ்வு மிகப்பெரிய மைல்கல், மேலும் இதை எங்கள் விருந்தினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அவர்கள் ஒருபோதும் மறக்க முடியாத விடுமுறையாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்” என்றும் பிரெட் ஓல்சன் குரூஸ் லைன்ஸின் தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையின் இயக்குநர் கிளேர் வார்ட் தெரிவித்துள்ளார்.
Click for more
trending news