அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.
சென்னையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக லஞ்சம் கொடுத்ததை சிடிஎஸ் நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக சிடிஎஸ் நிறுவனத்திடம் அதிமுக அரசு ரூ.26 கோடி லஞ்சம் பெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, சென்னையில் உள்ள காக்னைசன்ட் அன்ட் டெக்னாலஜி எனும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் KITS கேம்பஸ் கட்டிடம் கட்டுவதற்கும் சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.
இது உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்தி இருக்கிறது. கட்டிட அனுமதி பெறுவதற்காக, அதிமுக அரசில் உள்ள அதிகாரிகளுக்கும் அந்நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் வீடியோ கான்பிரன்ஸ் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்தத் தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டு விட்டது. அதனடிப்படையில் காக்னைசன்ட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசின் இந்த ஊழல் 2012- 2016 ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றதாக வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, உடனடியாக ஊழல் வழக்கினைப் பதிவு செய்து, சிபிஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெறவேண்டும்.
அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண்டும். ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் காக்னைசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சிடிஎஸ் நிறுவனம் அபராத தொகையையும் செலுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது,
அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான #CTS சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது. அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.
லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது FIR கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை! அதுமட்டுமல்ல மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா? என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.