This Article is From Jun 22, 2019

“அக்டோபர் வரைக்கும்தான் உங்களுக்குக் கெடு..!”- தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தானுக்கு செக்

எப்.ஏ.டி.எப் அமைப்பின் சந்திப்பு ஜூன் 16 முதல் 21 வரை, ஃப்ளோரிடாவில் நடந்தது

2018 ஆம் ஆண்டு நடந்த எப்.ஏ.டி.எப் சந்திப்பை அடுத்து, ‘க்ரே பட்டியலில்’ பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • எப்.ஏ.டி.எப் அமைப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
  • எப்.ஏ.டி.எப் நடவடிக்கை பாய்ந்தால் பாகிஸ்தானுக்குப் பொருளாதார நெருக்கடி
  • எப்.ஏ.டி.எப்-வின் சந்திப்பு ஜூன் 16 முதல் 21 வரை, ஃப்ளோரிடாவில் நடந்தது
New Delhi:

தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசு அரணாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு வெகு காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கறாரான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது FATF என்னும் ஃபினான்ஷியல் ஆக்‌ஷன் டாஸ்க் படை. இந்திய அரசைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரி ஒருவர் நமக்கு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தானை எச்சரித்த விவகாரத்தில் சீனா வக்காலத்து வாங்கினாலும், இறுதி எச்சரிக்கை குறித்த முடிவுக்கு அந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையாம். பாகிஸ்தான் எப்.ஏ.டி.எப்-ன் உத்தரவை சரிவர மதிக்காத நிலையில், ‘ப்ளாக் பட்டியலில்' அந்த நாடு சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் சர்வதேச அளவில் பல கட்டுப்பாடுகளுக்கு பாகிஸ்தான் உள்ளாகும். 

பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ஹஃபீஸ் சயீத், மசூத் அசார் மற்றும் பல ஐ.நா பட்டியலிட்டுள்ள தீவிரவாதிகள் மீது அந்நாடு சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றன. 

இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், “ஐ.நா தீர்மானம் மற்றும் எப்.ஏ.டி.எப் விதிமுறைகளுக்குப் புறம்பாக பாகிஸ்தானின் செயல்பாடு உள்ளது. குறிப்பாக தீவிரவாதிக்கு நிதி சார்ந்து ஒத்துழைப்பு கொடுப்பது. இது குறித்து இந்தியா, சர்வதேச அரங்கில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது” என்று கூறினார். 

அதேபோல பாகிஸ்தானில் வசித்து வரும் தீவிரவாதிகளான ஹஃபீஸ் சயீத் மற்றும் அசார் மசூத் போன்றோர் மீது அந்நாட்டு அரசு ஒரு வழக்கைக் கூடப் பதிவு செய்யவில்லை என்பதையும் பல உலக நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் பாகிஸ்தான் தரப்போ, லஷ்கர்-இ-தய்பா, ஜபாத்-உத்-தவா, ஃபலா-இ-இன்சனியாத், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளின் 700-க்கும் அதிகமான சொத்துகளை முடக்கியுள்ளதாக கூறியுள்ளது. 

பாகிஸ்தான் இப்படி சொல்ல, நம்மிடம் பேசிய இன்னொரு அதிகாரி, “பாகிஸ்தான் ஏன் தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தவில்லை என்பது குறித்து எப்.ஏ.டி.எப் கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல தீவிரவாத அமைப்புகளின் ஆயுதங்கள், தளவாடங்கள், முகாம்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து எப்.ஏ.டி.எப் விளக்கம் கேட்டுள்ளது” என்று விளக்கினார். 

எப்.ஏ.டி.எப் அமைப்பின் சந்திப்பு ஜூன் 16 முதல் 21 வரை, ஃப்ளோரிடாவில் நடந்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த எப்.ஏ.டி.எப் சந்திப்பை அடுத்து, ‘க்ரே பட்டியலில்' பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து இந்த க்ரே பட்டியலில் இருந்தால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளில் இருந்து நடவடிக்கைகளுக்கு உள்ளாகும். 

பாகிஸ்தான் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியால் தவித்து வருகிறது. இதனால் பொருளாதார ஏற்றத்துக்காக சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி கேட்டு வருகிறது பாகிஸ்தான். இந்த நிலையில் எப்.ஏ.டி.எப் நடவடிக்கை பாய்ந்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும். 


(Reuters தகவல்களுடன்)

.