ஹைலைட்ஸ்
- நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தை பாதுகாக்கிறது.
- உடலில் ஹீமோக்ளோபினை உற்பத்தி செய்கிறது.
- செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.
பெரிய நெல்லியில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் மற்ற ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது. இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும்போது பெரிய நெல்லிக்காய் அதிகமாக சாப்பிடலாம். கர்ப்பக் காலத்தில் பெரிய நெல்லிக்காயை அதிகமாக சாப்பிட்டு வரலாம். இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்க உதவும். பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவதால் மேலும் என்ன நன்மைகள் இருக்கிறதென்று பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி:
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பெரிய நெல்லியை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சாப்பிடலாம். நெல்லிக்காய், வெல்லம், கல் உப்பு சேர்த்து மதிய உணவிற்கு பின் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை சாப்பிடலாம்.
சருமம் மற்றும் கூந்தல்:
நெல்லிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து கலந்து ஸ்கால்பில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
செரிமானம்:
செரிமான பிரச்னைகளை சரிசெய்ய நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம். மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து குடிக்கலாம். அசிடிட்டி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படும்போது, அதனை சரிசெய்ய நெல்லிக்காய் சாப்பிடலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது நெல்லிக்காய்.
நீரிழிவு:
நெல்லிக்காயில் குரோமியம் இருப்பதால் உடலில் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.
ஹீமோக்ளோபின்:
நெல்லிக்காய் மற்றும் வெல்லம் இரண்டும் சேரும்போது உடலுக்கு தேவையான ஹீமோக்ளோபின் உற்பத்தியாகிறது. உடலில் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்க செய்கிறது.
நெல்லிக்காயை உலர்த்தி அல்லது அப்படியே கூட சாப்பிடலாம். பொடி செய்தும் சாப்பிடலாம். சட்னி, ஊறுகாய் மற்றும் சாலட்டுடனும் சாப்பிடலாம். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி, அரை தேக்கரண்டி இஞ்சி பொடி, ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். அல்லது சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டு வரலாம். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரும்புச்சத்து குறைபாடு, அசிடிட்டி, அஜீரணம் போன்ற உடல் உபாதைகளை சரி செய்யும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்த சிறந்தது.