தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
11.04.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை சட்டப் பிரிவு 144ன் படியும் 30.04.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மே மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை அரிசி குடும்ப அடைதாரர்களுக்கு நியாவிலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
- கட்டிடத் தொழிலாளர் உட்படப் பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
- பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்குத் தேவையான 15 கிலோ அரிசி,ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
- மேலும், தமிழகத்தில் காலை 6 மணி முதல் மத்தியம் 1 மணி வரை பேக்கரிகள்
- (அடுமணைகள்) இயங்க அனுமதிக்கப்படும். ஏற்கெனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் போல பேக்கரிகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தினை பொறுத்தவரையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் 1,075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுவரை 8 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐம்பதிற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், மாநில கொரோனா தடுப்பு மருத்துவக்குழு தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கினை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 கடந்திருக்கின்றது. 300க்கும் அதிகமானோர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த 21 நாட்கள் முழு முடக்க நடவடிக்கை (LOCKDOWN) நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் மோடி இதுகுறித்த மறு அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. நாளை காலை 10 மணியளவில் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என தகவல்கள் வந்திருக்கின்றன.