தமிழகத்தில் மேலும் சில வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்: எச்சரிக்கும் ராமதாஸ்
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் மேலும் சில வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்
- மே 3-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு நாமே காரணமாவோம்
- அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
zதமிழ்நாடு முழுவதற்கும் ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,477 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்திருப்பது குறித்து விசாரித்த போது தான், இன்று முதல் சில இடங்களில் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு தளர்வு தங்கள் பகுதிக்கும் பொருந்தும் என்ற தவறான எண்ணத்தில் கட்டுப்பாடுகளைத் தகர்த்துக் கொண்டு மக்கள் நடமாடத் தொடங்கியிருப்பதை அறிய முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது.
ஊரடங்கு தளர்வு என்பது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தான் பொருந்தும். தமிழகத்தைப் பொருத்தவரை எந்த மாவட்டங்களிலும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இன்றைய நிலையில் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் தீவிரமாக கொரோனா பாதித்த சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளாகவே உள்ளன.
மேலும் 9 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. ஆகவே, இந்த மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்புகளே இல்லை. மற்ற மாவட்டங்களில் சில தளர்வுகள் இருந்தாலும் கூட பொதுமக்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி சாலைகளில் நடமாட நிச்சயமாக அரசு அனுமதி அளிக்காது.
இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு முழுவதற்கும் ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம். அது நமக்கு உளவியல் ரீதியாகவும், பொருளியல் அடிப்படையிலும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை இன்னும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதுவரை அனைவரும் ஏற்கனவே இருந்ததை விட கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
காவல்துறையினரும் இதுவரை காட்டிய கண்டிப்பை விட இரு மடங்கு கூடுதல் கண்டிப்பை காட்டி மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க வேண்டும். இவற்றை செய்யத் தவறினால் மே 3-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு நாமே காரணமாகி விடுவோம். அந்தத் தவறை செய்யக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.