This Article is From Nov 16, 2018

‘சிபிஐ இயக்குநர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இல்லை’ : 10 தகவல்கள்!

சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மீது, அந்த அமைப்பின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, லஞ்சம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்

அலோக் வெர்மா, கட்டாய விடுப்பு அளித்ததற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

New Delhi:

சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மீது, அந்த அமைப்பின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, லஞ்சம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து, மத்திய விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அவர்களது விசாரணையில், வெர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வெர்மாவின் ‘நிர்வாக சுணக்கத்திற்கு' எதிராக விசாரணையில் ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து 10 முக்கிய தகவல்கள்:

  1. உச்ச நீதிமன்றம், இது குறித்தான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. அப்போது விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து ஆராயப்படும்.
  2. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், ‘2 வாரத்தில் மத்திய விசாரணை ஆணையம் சிபிஐ தொடர்பான வழக்கில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்' என்று முன்னர் உத்தரவிட்டிருந்தது. அதற்கான காலக்கெடு கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது. ஆனால் ஆணையத்தின் சார்பில், திங்கள் கிழமை தான் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
  3. வழக்கு விசாரணையின் போது சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
  4. சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, வெர்மா பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சிபிஐ அமைப்பிடம் சில தகவல்களை அவர் சரிவர பகிரவில்லை என்றும் அஸ்தானா குற்றம் சாட்டியிருந்தார்.
  5. அதேபோல வெர்மாவும், அஸ்தானா ஒரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டினார். அது குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
  6. அலோக் வெர்மாவின் கீழ் இயங்கிய சிபிஐ குழு, அஸ்தானாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்த போது தான் இந்த விவகாரம் பூதாகரமானது. வழக்குப் பதிவு செய்யும் முன்னரே அஸ்தானா, மத்திய அரசுக்கு, வெர்மா மீது லஞ்ச புகார் சுமத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  7. இப்படி சிபிஐ அமைப்புக்குள்ளேயே பனிப் போர் மூண்டதை அடுத்து, இரண்டு அதிகாரிகளுக்கும் கடந்த 23 ஆம் தேதி கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.
  8. அலோக் வெர்மா, கட்டாய விடுப்பு அளித்ததற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
  9. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள், ‘சிபிஐ இயக்குநர் வெர்மா, ரஃபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முனைப்பாக இருந்துள்ளார். அதை அறிந்த மத்திய அரசு, அவருக்கு பிரச்னை கொடுக்கும் நோக்கில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், குஜராத்தைச் சேர்ந்த அதிகாரி அஸ்தானாவையும் பிரதமர் மோடி காப்பாற்றப் பார்க்கிறார்' என்று குற்றம் சாட்டி வருகிறது.
  10. வெர்மாவுக்குப் பிறகு சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்ற நாகேஷ்வர் ராவ், அமைப்பின் பல அதிகாரிகளுக்கு பணி மாறுதல் உத்தரவு பிறப்பித்தார். இது வெர்மாவுக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளைக் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து மத்திய விசாரணை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது.

.